இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு

 

சூரியன் முளைக்காத வான்பார்த்து 

நடுங்கிக் கொண்டிருக்கும்

உளுந்து வயலில்   

களை பறித்துக் கொண்டிருக்கிறாள் 

அம்மா.

வீடு திரும்புவதற்காக நிமிர்பவளை 

குனியச் சொல்லி முத்தமிடுகிறது

குட்டிச் செடி.

இன்னும் கொஞ்ச நேரம் 

இருந்துவிட்டுப் போயேன் என்கிறது.

அப்படியெல்லாம் நான் 

இங்கேயே வாழ முடியாது 

வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென்கிறாள்.

புடவையை இழுத்து 

உள்ளங்கை பற்றி 

இறைஞ்சுகிறது 

"தனியாக வளர்வது  

பயமாக இருக்கிறது 

இன்று ஒருநாள் மட்டும் 

என்னுடன் இரு என்று".

வீட்டில் நிறைய வேலைகள் உள்ளதென

கை உதறி வரப்பேறுகிறாள்.

உச்சியிலிருந்து சூரியன் எட்டிப்பார்க்க 

மணியடிக்கிறது பள்ளிக்கூடத்தில்.

ஆறாவது முறையாக 

நுழைவாயில் கதவைப் பார்த்துவிட்டு 

மதிய சாப்பாட்டைத் 

தனியே 

திறக்கிறாள் மகள்.







Comments