12.மழை ரயிலின் தலையெல்லாம் குழந்தை சூடும் வாடா மலர்கள் ---லஷ்மி மணிவண்ணன் கவிதைகள் குறித்து

 





ஐந்து மாதக் குழந்தை  மடியில் தளும்பிக் கொண்டிருந்தது. தூக்கி வைத்து "த்த்த்த்தூதூ "என்று துப்புவது போல  விளையாடிக் கொண்டிருந்தாள் கொள்ளுப்பாட்டி. அடுக்கடுக்காக சிரித்துத்   துள்ளிய போது மீண்டும் தளும்பி  விழுந்தது குழந்தை.  இருவரும் விளையாடுவதை தூரத்திலிருந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள் மகளும், குழந்தையைப் பெற்ற பேத்தியும். கொள்ளுப்பாட்டி கவனித்தாள், தன்னிலிருந்து கரைந்த குண்டு கன்னங்கள் மகளுக்குத்தாவி பின்பு பேத்தியிடம் செழுமையாகி கடைசியாக புதிதாகப் பிறந்த குழந்தையிடம் மெல்ல வளர்ந்து  கொண்டிருந்தது. அப்போது காலமெனும் மாபெரும் மைதானத்தில் அழியாத சுடரொன்றை ஏந்தியபடி ஓடிக் கொண்டிருந்தாள். கொள்ளுப்பாட்டியின் வாழ்க்கை ஓட்டத்தில் படிப்பதற்கு வாயப்பளிக்கப்படவில்லை.  திருமணத்தைத் தொட்டதும் நின்றுவிட்டாள். மூச்சிரைக்க சோர்வுற்று அமர்ந்தபோது சுடரை  வாங்கிக் கொண்டாள் மகள். அவளும்  பத்தாம் வகுப்புடன் பள்ளியைக் கைவிட்டவள்தான் .சிறிய வாளியில் கொடுத்தனுப்பும் தேநீரை மட்டும் குடித்துவிட்டு பஞ்சு மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அழியாத சுடர் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. பேத்தியோ படிப்பை முடித்தவுடன் சுடரை வாங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். அவளுக்குப் பிடித்தமான ஆசிரியப் பணியில் சேர்ந்தாள். பாட்டிக்கும் அம்மாவுக்கும் திறக்காத கதவுகளை, உதைத்துத் திறந்தாள்.அழியாத சுடர் பிரகாசிக்க ஆரம்பித்தது. குழந்தை பிறந்ததுமே அதன் மென்கரங்களில் கொடுத்துவிட்டாள் தலைமுறைகளில் அழிந்துவிடாது பெருகும் சுடரை.



வாசிக்கும் போது ஒரு போதும் வாடாத மலரை கையளிக்கும் கவிதை அடிநெஞ்சில் அடுக்கடுக்காகப் பூக்கும் ஆனந்தத்தை உருவாக்குகிறது.



வாடாமலர் 


நடுவயதுத்தாயும் மகளும்

சாலையைக் கடக்கிறார்கள் 


தாய்க்கு நான்கு இஞ்ச் உயரம் மகள் 


தாயிடம் காணாமல் போகும்

ஒன்றினையெடுத்து

கால அலங்காரம்

செய்து வைத்தது போலே

இருக்கிறாள்

மகள் 


மகள் ஒருமகளுடன் மீண்டும்

இதே சாலையைக் கடப்பார்கள்

பிறிதொரு நாளில் 


நான்கு இஞ்ச் உயரம் அதிகம்

கொஞ்சம் கூடுதல் முகப்பொலிவு

கட்டுமானம்

கால அலங்காரம் செய்து

வைத்தது போலே

மகளுக்கு

இன்னொரு மகள் 


இப்படியாக 

இஞ்ச் இஞ்சாக

வளர்ந்து கொண்டிருக்கிறது

வாடாமலர்.


( வாடாமலர் தொகுப்பிலிருந்து ) 



"தாயிடம் காணாமல் போகும், ஒன்றினையெடுத்து,கால அலங்காரம்

செய்து வைத்தது போலே,இருக்கிறாள்

மகள்". காணாமல் போவது எது ?, அதை அள்ளி எடுத்து வந்து மகளுக்கு நிரப்புவது எது ?. எல்லாமே பேரறிவு. "கொஞ்சம் கூடுதல் முகப்பொலிவு

கட்டுமானம்". இன்னும் கொஞ்சம் குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் அதன் குழந்தைக்கு என இயற்கை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. குறை வைப்பதே இல்லை. பப்பாளி மரத்தின் கனிகள் சுவை மிக்கதாக இருக்கின்றன. ஒவ்வொரு விதையிலும் உயரமும், வண்ணமும், இலைகளின் அமைப்பும், சுவையும் அழியாத சுடராக மாறியிருக்கிறது. எங்கு விழுந்தாலும் முளைத்தெழும் செடியில் எல்லாமும் வந்துவிடுகிறது. இன்னும் கொஞ்சம் வளரட்டும். இன்னும் கொஞ்சம் இனிக்கட்டும் என்றே பாலூட்டுகிறது இயற்கை. 


🔘🔘🔘



தண்ணீர்க்குடத்தை  கவிழ்த்து ஊற்றியபோது விழித்துக் கொண்ட சிறுசெடியில் புதிய இலைகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. வேட்டிகளால் முடிச்சிட்டுக் கட்டப்பட்ட திரைக்கு நடுவே உறங்கிக் கொண்டிருந்தவரை இறுதியாகக் குளிப்பாட்டுவதற்கு தண்ணீர் ஊற்றிய குடம்தான் எனத் தெரிந்ததும்  சிலிர்த்துக் கொண்டது மொத்த உடலும். தலை முழுகியபடி கால்கள் துவள நடந்து வந்தது மட்டுமே நினைவிலிருந்தது அவளுக்கு. மூன்றாம் பருவத் தேர்வுக்காக இரவெல்லாம் படித்துக் கொண்டிருந்தான் மகன். வழக்கமாக தேநீருடன்  எழுப்பிவிடும் அவனது அப்பா அன்று வெகுநேரமாகியும் வரவில்லை. தேர்வு எழுத வேண்டாமென நினைத்தபடியே படுத்திருந்தான். தலைகோதி எழுப்பிய அம்மாவின் உள்ளங்கையில் அப்பாவின் ரேகைகள் புதிதாக ஓடியது போலிருந்தது. குளிக்கச் சென்றான். கடலைக் கொடிகளை கொல்லையில் இருந்து எடுத்து வந்து திண்ணையெங்கும் பரப்பியிருந்தார்கள். குறுவைக்கு வயலைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. பதினேழாம் நாளில் வீடு வேறொரு உலகத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதைப் போலத் தோன்றியது அவளுக்கு. அழுது கொண்டிருந்த மகளை குளிப்பாட்டினாள். குளியல் மட்டுமே மீட்சி எனத் தோன்றியது.  மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வயலுக்குச் செல்லும் வழியில் பார்த்தாள் கணவர் வழக்கமாகக் குளிக்கும்  யானைக் குளம் அமைதியாக இருந்தது. காரிய நாளில் இறங்கிய கல் ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மீன் குஞ்சுகள் மட்டும் காலைச் சுற்றி வந்தன.  வெடித்து அழுதவள் பின்பு யாரும் பார்த்துவிடக் கூடாதென முகத்தைக் கழுவினாள். வாதை உடலின் ஒரு புறத்தில் அவளை அடித்துக் கொண்டிருந்தது, மறுபுறத்தில் மருந்திட்டு மகளும் மகனும் காப்பாற்றி அழைத்துச் சென்றார்கள். உழுத வயலில் இறங்கி நடந்தாள். சேற்றில் தடுமாறிய கால்கள் பின்பு மெல்ல ஊன்றி நிற்க ஆரம்பித்தன. 


இறப்பை பூமியிலிருந்து பார்க்காமல்

வானிலிருந்து நோக்கும் 

லஷ்மி மணிவண்ணனின் கவிதை, வீட்டைத் தவிர எல்லாமும் அதனதன் இயல்பிலிருப்பதைச் சொல்லி ஆற்றுப்படுத்துவதற்கு பதிலாக மெய்ப்பொருள் நோக்கி மனத்தை நகர்த்துகிறது. 



ஒருவர் இறந்து போனால் 



ஒருவர் இறந்து போனால் 

மீதமுள்ள உலகமும் அப்படியே இருக்கிறது

ஒரு மாற்றமும் இல்லை 


மீதமுள்ள உலகம் அவருக்கு 

அணைந்து போனது தவிர்த்து 

ஒரு மாற்றமும் இல்லை 

மீதமுள்ள உலகம் 

அப்படியேதான் இருக்கும் 

என்பதை 

கொஞ்சம் முன்னதாக 

அவர் தெரிந்திருந்தால் 

மீதமுள்ள உலகத்தில் 

அவர் நீடித்திருக்கவும் கூடும் 


இன்னும் சிறிது நாட்கள் 

மாதங்கள் 

ஆண்டுகள் 


மொத்தத்தில் 

மீதமுள்ள உலகத்தில் 

இருப்பவர் நாமில்லையா 

பல்லியின் வால் போல 

இழந்த உலகின் ஒருபகுதிதான் 

இந்த மீதமுள்ள உலகம் இல்லையா ? 


( கடலொரு பக்கம் வீடொரு பக்கம் தொகுப்பிலிருந்து ) 


" மீதமுள்ள உலகம் அவருக்கு அணைந்து போனது தவிர்த்து " அவர் கண்களை மூடிக்கொண்டார் அவ்வளவுதான்.  பூமியில் ஒளி அப்படியேதான் இருக்கிறது. "ஒரு மாற்றமும் இல்லாமல் ". எங்கிருந்து உருவானதோ அங்கேயே சென்றுவிட்டது. புதிதாகப் பிறந்த குழந்தையால் பிரபஞ்சத்தின் எடை கூடுவதும் இல்லை. இறந்தவிட்ட மனிதனால் குறைவதுவும் இல்லை. "இழந்த உலகின் ஒரு பகுதிதான் இந்த மீதமுள்ள உலகம் இல்லையா "  இறந்து விட்ட மனிதனின் நினைவுகள் தராசின் ஒரு புறம் மிதந்து அழுத்துகிறது. மீதமிருக்கும் உலகம் மிகுந்த எடையுடன் தராசின் மறுபுறம் இழுக்கிறது. மீதமிருக்கும் உலகம் எல்லோரையும் வாழ்வை நோக்கி அழைத்துச் செல்கிறது. காலம் செல்லச் செல்ல இறந்த மனிதன் வெகுதூரத்திற்கு சென்றுவிடுகிறான். தத்துவத்தை நோக்கி நகரும் கவிதை  இயற்கையின் நியதி எதன்பொருட்டும் மாறுவதில்லை என்ற உண்மையை சட்டைப்பையில் திணிக்கிறது. உண்மையின் முகத்தைப் பார்க்க விரும்பாமல்  வேண்டாம் வேண்டாமென ஓடுகிறது நெஞ்சம். 



🔘🔘🔘



நகரும் படிகளில் முதன்முதலாக இறங்கும் ஆறு வயது சிறுவனிடம் "எஸ்கலேட்டர் " என்றார் அவனது அப்பா. "படிக்கட்டுகள் எப்படிப்பா இறங்குகின்றன ? "என்று கேட்டான். ஏறும் போது " படிக்கட்டுகள் எப்படிப்பா  ஏறுகின்றன ? " உள்ளே சென்ற படிக்கட்டுகள்  நீண்ட பட்டையாக நகருமா " என்ற போது சிறிது முறைத்துவிட்டு " எஸ்கலேட்டர் என்றால் அப்படித்தான் " என்று சொல்லிவிட்டு சென்டரல் மெட்ரோவில் ரயிலுக்காக  காத்திருந்தார். தானாகவே திறந்து கொள்ளும் கதவுகள், தானாகவே மூடிக்கொண்டன.வியப்பு தாளாமல் கைகளைத் தட்டினான். பிடித்துக் கொண்டார் அப்பா. ஏ.சியின் குளுமையில் அமருமிடம் சில்லென்றிருந்தது. யாரும் யாருடனும் பேசாமல் ஃபோனை வெறித்தபடி இருந்தனர். ஜன்னல் வழியாக கீழிருந்த மாநகரத்தைப் பார்த்ததும் குதூகலத்தில் குதித்தான். அவனை "ஒழுங்காக இரு " என்றார். சிறிது நேரத்திலேயே பூமிக்குள் செல்ல ஆரம்பித்தது ரயில். உள்ளே மட்டும் வெளிச்சமிருந்தது. வெளியில் மெல்லிய ஒளியில் சுவர் மட்டுமே தெரிந்தது. ஏறுபவர்களும் இறங்குபவர்களும் பார்த்துக் கொள்ளவில்லை என்பது அவனுக்கு விநோதமாக இருந்தது. பூமிக்கடியில் ஃபோனுக்கு சிக்னல்  கிடைக்காமல் டென்ஷனில் இருந்தவரிடம் " தண்ணீர் இருக்குமிடம்  தெரியவில்லை.மரங்களின் வேர்களை இங்கு பார்க்கலாமா அப்பா ! " என்றான். அரைமணி நேர சுரங்கப்பாதையைக் கடந்து  திருமங்கலத்தில் வெளியே வந்ததும் மீண்டும் துள்ளிக் குதித்தான்.  கோயம்பேடு மெட்ரோவில் இறங்கிய போது "வானத்திலும், தரையிலும், பூமிக்கடியிலும் செல்லும் ஒரே ரயில் மெட்ரோதான் அப்பா " என்றான். அவனது அப்பாவுக்கு சிக்னல் கிடைத்து விட்டது. 



ஒரு மெட்ரோ ரயிலுக்குள் நுழைவதைப் போல அவ்வளவு எளிதாக குழந்தையின் உலகில் நுழைய முடியாது என்று சொல்லும் லஷ்மி மணிவண்ணன் இக்கவிதையால்  அவ்வுலகிற்கான வழியைக் காட்டுகிறார். 




மழையில் நனைந்த நிலையத்தின்



மழையில் நனைந்த நிலையத்தின் 

கிளைகள் பிரியும் இருப்புப்பாதைகளை

நீங்கள் மேம்பாலத்தின் உயரத்தில் இருந்து காணவேண்டும் முதலில்

பாதைகள் புழுக்களாக நெளிகின்றன

அவை இந்த மழைத் துளிகளுக்காகவே

காத்திருந்தவை



பின்னர் மேம்பாலத்தில்

இறங்கி

பெருமரம் கடந்து

நிலையத்திற்குள் நுழைந்து

இருப்புப்பாதைகளை மீண்டும் காணவேண்டும்



மழை வந்து நிற்பதுவரையில்

வெறும் இருப்புப் பாதைகளாக இருந்தவை

இப்போது மூச்சு விடுகின்றன



இனி டீசல் வண்டியில் ஏறி

பெருமரத்தை அது சுழற்றிக் காட்டுவதைப்

பார்த்து விட்டு

இறங்கி விடுங்கள்



இதற்குப் பெயர்தான் ரயில் வண்டிப் பயணம்

என்று உங்கள் குழந்தைக்கு

காதோரம் சொல்லிக் கொடுங்கள்

அதன் ரயில் வண்டிப்பயணம்

வேறு விதமாக இருந்தது அதற்கு

உடனடியாக நினைவுக்கு வந்து விடும்



இதோடு பணி நிறைவடையவில்லை

நிலையத்திற்கு வெளியே ஒருவன்

எங்கே சென்று திரும்புகிறீர்கள் ?

எனக்கேட்க வாயிலில் நிற்கிறான்



"குழந்தையின் ஊருக்கு" என பதில் சொல்லிவிட்டு

பரிசோதகரிடம் டிக்கட்டை ஒப்படைத்து விடுங்கள்



இப்போது நீங்கள் கைவீசி நடக்கையில்

உங்கள் பின்னே புன்னகையுடன்

வந்து கொண்டிருப்பதுதான்

குழந்தையின் ஊர்

போய்ச் சேருங்கள்

திரும்பி விட வேண்டாம். 



(கடலொரு பக்கம் வீடொரு பக்கம் தொகுப்பிலிருந்து )



நாம் காணும் உலகம் குழந்தைகளுக்கு எப்போதும் வேறொரு உலகமாகவே  இருக்கிறது. வயதான கண்கள் உயிரற்றதாகப் பார்ப்பதை குழந்தையின கண்கள்  உயிருள்ளதாகவே பார்க்கின்றன." மழை வந்து நிற்பதுவரையில்

வெறும் இருப்புப் பாதைகளாக இருந்தவை

இப்போது மூச்சு விடுகின்றன". இரும்பென்றால் வெறும் இரும்புதான். மூச்சு விடும் ஒலியைக் கேட்கும் செவியிருந்தால் அதுவும் உயிருடையதாகிறது. கவிதை எல்லாவற்றையும் உயிருள்ளதாக்கும் வல்லமையால் இயங்குகிறது. "குழந்தையின் ஊருக்கு" என பதில் சொல்லிவிட்டு

பரிசோதகரிடம் டிக்கட்டை ஒப்படைத்து விடுங்கள்". அவ்வளவு எளிதாக குழந்தையின் ஊருக்குச் செல்லமுடியுமா. மழை இரும்பைக் கரைத்து மூச்சுவிடச் செய்ததைப் போல களங்கமின்மை அகங்காரத்தைக் கரைக்க வேண்டும். எல்லாவற்றையும் புதிதாக வாங்கிக் கொள்ளும் கண்களும் நெஞ்சமும் வந்தால் மட்டுமே குழந்தையின் ஊருக்குச் செல்ல முடியும்.இல்லாவிடில் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால் ஒருமுறை நுழைந்துவிட்டால் அவ்வுலகம் கைவிடாது. எப்போது வந்தாலும் அணைத்தபடி அழைத்துச் செல்லும்."உங்கள் பின்னே புன்னகையுடன், வந்து கொண்டிருப்பதுதான்

குழந்தையின் ஊர், போய்ச் சேருங்கள்

திரும்பி விட வேண்டாம். " ஒவ்வொருவருக்குள்ளும் குழந்தை இருந்த அந்த ஊர் இன்னமும் ஒளியுடன்தான் இருக்கிறது. லஷ்மி மணிவண்ணனின் கவிதை ரயில்,  நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறது. "ஏறுவோர் ஏறுக ! ஏறாதோர் என்றும் வாசலிலேயே காத்திருங்கள் " என்று விசிலடிக்கிறது.







கவிஞர் : லஷ்மி மணிவண்ணன் 


கவிதைத் தொகுப்புகள் : 


1.சங்கருக்கு கதவற்ற வீடு 


2. வீரலட்சுமி 


3. எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் 


4. கேட்பவரே


5. கடலொரு பக்கம் வீடொரு பக்கம் 


6. விஜி வரையும் கோலங்கள் 


7. வாடாமலர்


Comments