கொசஸ்தலை
தடதடக்கும் பாலம் கடக்கையில்
நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறேன்
ரயிலை உடைத்து
கால்களை இழுப்பவள்
எந்நேரமானாலும்
விழித்துக் கொள்கிறாள்
சுருள் சுருளாக
கரையொதுங்கும் மணலை
அவளுடலில்
இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
பாய்ந்து பரவும்
குருதியின் கறையை
எரித்தபடி சிரிக்கிறது புதர்ச்செடி
நடுங்கி ஒளியும்
பறவையின் வயிற்றை
முத்தமிடுகின்றன
முதுமீன்களின் எலும்புகள்
முழுவதுமாக தோண்டமுடியாமல்
முழுவதுமாகப்
புதைக்கவும் முடியாமல்
இடுப்புடன் மட்டும் நின்று கொண்டு
மல்லுக்கட்டுகிறாள்
கழிமுகத்தில்
அவளது இறப்பு
கொண்டாடப்படுகிறது
சாம்பலைத் திணித்துக் கொல்லும்போது
மின்சாரத்தை அள்ளிச் செல்லும்
கோபுரங்களின் பற்களில்
ஒளிர்கிறது
1000000 W
கொதிக்கும் கடல்
ஊருக்குள் நுழையும் போது
பூமியின் வரைபடத்தில்
புழுவெனக் குறுகித் துள்ளுகிறாள்
இரும்பு ரப்பரால் அழித்து
ஊதும் பெருவாய்
குருதியை மென்று துப்புகிறது
எங்கும் பரவுகிறது
கடல்நீலம்
பதட்டம் சூழ
முன்னும் பின்னுமாக
பயணிக்க வேண்டுமென
இடுப்பைப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள்
படைப்பு -தகவு செப்டம்பர் 2021
Comments
Post a Comment