பித்து வெடிப்புக் கோட்பாடு




மிகப்பிரம்மாண்டமான 

மஞ்சள் மலரின் இதழ்கள் 

விரிந்து பரவும் திசையெங்கும் 

சூம்பியிருக்கும் குட்டிச் சூரியர்கள்  செய்வதறியாது திகைக்கிறார்கள் 


மருத்துவமனையில் நிற்கும் என்னிடம் 

காலண்டரிலிருந்து 

நலம் விசாரிக்கும் விதைப்பாளன் 

சமன்குலையும் தராசுத் தட்டுகளை 

இறைச்சிக் கடையில் 

பார்த்தாயா என்கிறான் 


கல்லீரலில் ததும்பும் மஞ்சளைத்தான் 

மாபெரும் மலருக்கு பூசியதாகச் சொல்லும் வான்கோ 

தாமதமாகவே மருத்துவர் வருவார் என கூட்டத்தைப் பார்த்து விசிலடிக்கிறான் 


விதைகள் வெடிக்கும் முன்பே  

கொத்திச் செல்லும் பறவைகள் 

பித்தை வெடிக்க விடாதீர்கள் 

விதைப்புக் காலத்தில் நிறமொழுகுவது 

நிலத்துக்கு நல்லதல்ல என்கின்றன 


"டோக்கன் நம்பர் 24 " அழைக்கிறது 


மலர்களை மலர்களாகப் பாருங்களேன் 

அதில் உங்களுக்கென்ன பிரச்சினை 

அதீத காமத்தில் நிறங்களாக உளறுவது  கலைக்கு நல்லதல்ல என்கிறார் மருத்துவர் 


மாத்திரைகளுடன் வெளியே வந்தால் 

இதோ பாருங்கள் மொக்குகள் 

குழந்தைகள் சூடியவுடன் 

சப்தமிடாமல் வெடிப்பவை 

துய்ய வெள்ளையெனக் 

குதூகலிக்கும் தலைவி

மஞ்சளைப் பூசிக்கொள்வது 

ஆண்களுக்கு நல்லதல்ல என்கிறாள் 


மொட்டை மாடியில் நின்று பார்க்கிறேன் 

தூரிகையால் பூமியைத் தோண்டும் வான்கோ 

"தீவிரமாக இறங்குகிறேன் 

பாதியில் காப்பாற்றிவிடாதே !"

வளர்ந்தெழும் 

அழியாத மலரின் நறுமணமே வாழ்வென்கிறான் 


தீராத  இடைஞ்சல்களுக்கிடையே                                    

இளஞ்சிவப்பாகவே 

சிரித்துக் கொண்டிருக்கும்  

கிருஸ்துமஸ் விண்மீன்

மஞ்சளை  அவிழ்த்துப்

பிரவாகமாக்குங்கள்  தந்தையே ! 

பிடித்த கவிதையை 

பாடாதிருப்பது 

உயிருக்கு நல்லதல்ல என்கிறது.


( நன்றி : 

The sower painting - Vincent Van Gogh )

Comments