பாழாய்ப் போன பெண்டுலம்

கால்சட்டை அணிந்தபடி
தன்னைத்தானே தூக்குபவளின்
தோள்களில் வளரும் இளமையை
உள்ளிருந்தே உண்ணுகின்றன
அசையும் பிம்பத்தின்  நாக்குகள்.


இருவருக்கும் நடுவில் நின்று
வேடிக்கை பார்ப்பது
சித்ரவதையாய் இருக்கிறது கண்ணாடிக்கு.


பதின்வயதின் நதிக்கரையில்
கால் வைத்ததும்
துள்ளுபவளின் முன்பு
அவளுக்கு சிறிதும் பிடிக்காத
பெண்டுலமொன்று
வந்து நிற்கிறது.


உடைப்பதற்காக
சுவற்றை நோக்கி உதைக்கிறாள்.
கண்ணாடிக்குள் பெருகும்
காட்டு மரங்களில் தொங்கவிடுவதற்காக
அது
அவளை
உள்ளே இழுத்துக் கொண்டு ஓடுகிறது


கிளைகள் தோறும் குதித்தாடுபவள்
களைத்து நதியில் விழும் போது
சூழ்ந்து மிதக்கின்றன செம்பூக்கள்.
விலக்கிக் கொண்டே இருக்கிறாள்
கரையேறவே முடியவில்லை.
மீன்பிடிக்க வருபவர்களின்
வலைகளிலிருந்து தப்பிப்பதற்காக
தவளையாகித் தாவுகிறாள்.


இதற்கு முன்பு சென்றவர்கள்
செதுக்கிய குகையில்
சப்தமிடாது ஒளிந்து கொள்கிறாள்
மூச்சுமுட்ட அழுத்துகிறது நீள் இரவு.


அழுதபடியே
வெளியேறுபவளின்
நெஞ்சு பெருகுகிறது
அமுதுண்ண அமரும் பறவைகள்
விடாமல் கொத்துகின்றன.


தூக்கிச் செல்லும் பறவைகள்
வழியில் அவளை நழுவ விடுகின்றன.
மிகச்சரியாக வந்து
பிடித்துக் கொள்ளும் பெண்டுலம்
வீட்டுக்குள் வந்ததும்
பொத்தென்று போட்டு உடைக்கிறது.


அதற்குப்பிறகு
அவள்
பிம்பங்கள் உருவாகாத கண்ணாடிக்கு
தன் முதுகைக் காட்டியபடியே
சுவற்றில் முகம் பார்த்துக் கொள்கிறாள்.


அடிக்கடி சிரித்தாலோ
சிறிது
தன்னைத்தானே தூக்கினாலோ
தவறாது முன்னே வந்து விடுகிறது
பாழாய்ப் போன பெண்டுலம்


பதாகை -மார்ச் 2020

Comments