சிவப்பு பிடிக்காத நகரம்

இவ்வளவு சிவப்பு 
இந்த நகரத்துக்கு ஆகாது 
நாங்கள் வெயில் குளியலுக்கு மட்டுமே 
சூரியனைப் பயன்படுத்துகிறோம். 
மாலையில் மஞ்சள் வண்ணத்தை 
மிகச்சரியாக அணிந்திருக்கிறது சூரியன். 
ஆம் எங்களுக்கு 
அதைத் தவிர வேறெதிலும்  ஆர்வமுமில்லை. 
போர்க்களத்து செங்குருதியின் உவமை பாட இப்போது நேரமில்லை ஓளவையே! 
உன் அகப்பாடலில் தூண்டும் சொல்லை 
நாங்கள் தூண்டிலிட்டுப் 
பிடித்துக் கொள்கிறோம்.
பறவைகளைக் காணவில்லை 
மர நிழல்கள் இருளின் 
மறை நாடகங்களுக்கு 
சாட்சியாக ஓத்திகை பார்க்கும் கணத்தில் 
நீ மிக மெல்லிய தீற்றலாக 
மறைந்து போகிறாய் 
அல்லது 
நாங்களே உன்னை 
விரும்பிப் புதைக்கிறோம்.
இவ்வளவு சிவப்பாக 
இந்த நகரத்துக்கு 
நீ தேவையில்லை 
சூரியனே !

--கொலுசு மார்ச்-2019 

Comments